ஒருபுறம் கொரோனா,மறுபுறம் ஜிகா வைரஸ்..மிக பெரிய சிக்கலில் கேரளா.. தமிழகத்திற்கு பரவுமோ- மக்கள் அச்சம்
திருவனந்தபுரம்: ஒருபுறம் கொரோனா பாதிப்பு, மறுபுறம் ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் தமிழ்நாடு கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்த கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரம் என்ற விதத்திலேயே இருக்கிறது
ஆனால், சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மத்திய அரசு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பியுள்ளன.
அதிகரிக்கும் கொரோனா குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனா பரவல் 15.2% வரை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் கேரளாவில் 16148 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 75 பேர் சுகாதார பணியாளர்கள் ஆகும்
வைரஸ் பாதிப்பு கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் கேரளாவில் ஒரு மாத்தில் வைரஸ் பாதிப்பு 1804இல் இருந்து 10 ஆயிரம் வரை சென்றது. அதாவது வெறும் நான்கு வாரங்களில் 472% வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அதன் பிறகு 11 நாட்களில் வைரஸ் பாதிப்பு கேரளாவில் 30 ஆயிரம் வரை சென்றது. இப்போது கொரோனா பரவல் அந்தளவு இல்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி.
ஜிகா வைரஸ் மற்றொரு புறம் ஜிகா வைரஸ் பாதிப்பும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சிறார் ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை அங்கு மொத்தம் 35 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 24 பேர் ஜிகா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டனர். அதேநேரம் 11 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள அரசு இப்படி கொரோனா வைரஸ், ஜிகா வைரஸ் என இருமுனை தாக்குதலைக் கேரளா எதிர்கொண்டுள்ளது. நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மற்ற மாநிலங்களைவிட அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாலேயே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கோரிக்கை தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அங்குத் தீவிரமாக உள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் சனிக்கிழமை மட்டும் 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து தினமும் நூற்றுக் கணக்கனோர் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அப்படி கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் மூலம் கொரோனா அல்லது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
إرسال تعليق