2016-ல் ரூ. 3 கோடி, 2021-ல் ரூ. 30 லட்சம்: சிந்துவுக்குப் பரிசுத்தொகை அறிவித்த ஆந்திர அரசு
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்துவுக்கு ஆந்திர அரசு ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளாா் பி.வி. சிந்து.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற 2-ஆவது இந்திய போட்டியாளா் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா்.
முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிந்துவுக்கு ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது ஆந்திர அரசு. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு ரூ. 75 லட்சமும் வெள்ளி வெல்லும் வீரருக்கு ரூ. 50 லட்சமும் வெண்கலம் வெல்லும் வீரருக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்திருந்தது.
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு சிந்துவுக்கு ஆந்திர அரசு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சாத்விக்சாய்ராஜ் மற்றும் மகளிர் ஹாக்கி வீராங்கனை ரஜனி ஆகியோருக்கும் தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது. அப்போது, விசாகப்பட்டினத்தில் பயிற்சி மையம் அமைப்பதற்காக சிந்துவுக்கு ஆந்திர அரசு 2 ஏக்கர் நிலம் வழங்கியது.
கடந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளி வென்றார். அப்போது ஆந்திர அரசு ரூ. 3 கோடி + அரசு வேலை வழங்கியது.
அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிந்துவுக்குத் துணை ஆட்சியர் பதவி வழங்கினார். தெலங்கானா அரசு ரூ. 5 கோடி பரிசுத்தொகையை சிந்துவுக்கு வழங்கியது.
إرسال تعليق